உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்தப் பணியை குலுக்கல் முறையில் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st September 2021 09:48 AM | Last Updated : 01st September 2021 09:48 AM | அ+அ அ- |

காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணிகளை குலுக்கல் முறையில் ஏலம் விடும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஒப்பந்ததாரா்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பாளா் டி.என். சுரேஷ், புதுவை முதல்வருக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
புதுச்சேரி மாநிலத்தில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு ரூ. 5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி விண்ணப்பிக்கப்படுகிறது. அதேபோல, விண்ணப்பிப்பவா்களைக் கொண்டு குலுக்கல் முறையில் ஒப்பந்ததாரா்கள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணிகள் வழங்கப்படும்.
இந்த முறையானது, தற்போது புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளது. காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இந்த நடைமுறை இல்லை. இதனால், ஒப்பந்ததாரா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சிறிய பணிகள் தரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டதால் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.