

உக்ரைனிலிருந்து காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்த மாணவிக்கு ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
காரைக்காலில் இருந்து மருத்துவப் படிப்புக்காக உக்ரைனுக்கு 4 மாணவர்கள் சென்றுள்ளனர். அந்நாட்டில் நடைபெறும் போரின் காரணமாக மாணவர்களை அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி காரைக்கால் பச்சூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் - ஜெயலட்சுமி தம்பதியின் மகள் சிவசங்கரி, சனிக்கிழமை புதுதில்லி வந்துசேர்ந்தார்.
பின்னர் அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் வந்தடைந்தார். அவரது வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர் எஸ்.பாஸ்கரன் இருந்தார். மாணவியிடம் கல்வி மற்றும் போர் பதற்றத்தில் மாணவ மாணவியரின் செயல்பாடுகள், பாதுகாப்பாக திரும்பி வருவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து ஆட்சியர் மாணவியிடம் கேட்டறிந்தார்.
மாணவி சிவசங்கரி செய்தியாளர்களிடம் கூறுகையில், போர் நடந்துவரும் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்ப பெரும் கஷ்டத்தையே மாணவ, மாணவியர் சந்தித்து வருகின்றனர். போர் ஏற்பட்டது முதல் தூக்கமின்றியும், வெளியே செல்ல முடியாத நிலையிலும், கைப்பேசி மூலம் தொடர்புகளுக்கான நெட்வொர்க் இல்லாமலும், குடிநீர், மின்சாரமின்மை என பல துன்பங்களை சந்தித்தேன்.
இருக்குமிடத்திலிருந்து எல்லையை கடப்பதற்கு கிடைத்த உதவிகளின் மூலம் எல்லையை கடந்தேன். எல்லையில் உக்ரைன் தரப்பினரால் மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வும் நடந்தது. புதுச்சேரி, தமிழகம், மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளேன். இப்போது எல்லையை கடப்பதற்கு பேருந்து வசதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் பல மாணவர்கள் கஷ்டத்தை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.