காரைக்காலில் குளிர்பானம் அருந்திய மாணவர் உயிரிழப்பு: சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு

குளிர்பானம் அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, புதுவை அரசு நியமித்த 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தனர்.
புதுவை சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு
புதுவை சிறப்பு மருத்துவக் குழு ஆய்வு

காரைக்கால்:  குளிர்பானம் அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, புதுவை அரசு நியமித்த 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தனர்.

காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில்  8-ஆம் வகுப்பு படித்து வந்த பால பணிகண்டன், அதே வகுப்பை சேர்ந்த மற்றொரு மாணவியின் தாயார், காவலாளி மூலம் அளித்த குளிர்பானத்தை குடித்தார். வீட்டுக்கு வந்த பின்னர் உடல்நிலை பாதித்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

மாணவி ஒருவரின் தாயார் சகாயராணி விக்டோரியா என்பவர் குளிர்பான பாட்டிலை வழங்கியதும், அதில் விஷம் கலந்திருப்பதையும் விசாரணையில் அறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

காரைக்கால் மருத்துவமனையில் மாணவருக்கு உரிய சிகிச்சை தரப்படவில்லை என அவரது குடும்பத்தினரும், பல்வேறு கட்சியினரும் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்தும், இந்த வழக்கை உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோரி வருகிற 9-ஆம் தேதி காரைக்காலில்  முழு அடைப்புப்  போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரைக்காலில் மாணவர் பால மணிகண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்ய புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் பாலச்சந்தர், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவை புதுவை அரசு அமைத்துள்ளது.

இக்குழுவினர் செவ்வாய்க்கிழமை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவக் கண்காணிப்பாளர் கண்ணகி மற்றும் மருத்துவர்களிடம் இதுதொடர்பாக கருத்துகளை கேட்டறிந்தனர்.

ஆய்வுக்குப் பின் அக்குழுவில் இடம் பெற்றிருந்த  மருத்துவர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது: துறை செயலரின் அறிவுறுத்தலின்பேரில் 3 பேர்  கொண்ட மருத்துவக் குழுவினர், காரைக்காலில் பாலமணிகண்டன் என்கிற பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக மருத்துவத்துறையினருடன் ஆலோசனை நடத்தினோம்.

மாணவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது முதல் இறுதி வரை நடைபெற்ற சிகிச்சை முறைகள் குறித்து  மருத்துவர், செவிலியர் மற்றும் பிற பணியாளர்கள், நிர்வாக நிலையில் நடத்தப்பட்ட பணிகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தோம். இதுதொடர்பான பல விவரங்களை சேகரித்துள்ளோம். மாணவருக்கு அளித்த சிகிச்சை, மேலும் என்ன செய்திருக்கலாமென்கிற ஆலோசனைகள் உள்ளடக்கி அறிக்கையாக சுகாதாரத்துறை இயக்குநரிடம் வழங்குவோம் என்றார்.

உடற்கூறாய்வு முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இது நீதித்துறை தொடர்பானது என்பதால் வெளியே  தெரிவிக்க இயலாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com