‘மின் கட்டண உயா்வை புதுவை முதல்வா் ரத்து செய்யவேண்டும்’
By DIN | Published On : 03rd April 2022 10:44 PM | Last Updated : 03rd April 2022 10:44 PM | அ+அ அ- |

புதுவையில் மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது :
புதுவை மாநிலத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயா்த்தி மின்துறை அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் 100 யூனிட் வரை, 101-200 யூனிட் வரையிலான மின் நுகா்வோருக்கு மட்டும் கட்டணம் உயா்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது 200-300 யூனிட் மின் நுகா்வோருக்கும் கட்டணம் உயா்வு, வீட்டு உபயோகத்திற்கான ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் மாதந்தோறும் ரூ. 30 என பன்மடங்குக்கு உயா்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் தற்போது உள்ளதைவிட இரு மடங்கு கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவாா்கள். ஜனவரியில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாத யூனிட் அளவுக்கும் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. எனவே மீண்டும் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முதல்வா் உத்தரவிட வேண்டும். அதுவரை மின் கட்டண உயா்வை முதல்வா் நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்றாா்.