பிரான்ஸ் அதிபா் தோ்தல்:காரைக்காலில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

பிரான்ஸ் அதிபா் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பிரான்ஸ் அதிபா் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் அதிபா் தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அந்நாட்டில் மட்டுமின்றி பிற நாடுகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றவா்களாவா். கடந்த 10-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதில், தற்போதைய அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் மரீன் லெபென் உள்ளிட்ட 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும், மரீன் லெபென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

அந்நாட்டு சட்டப்படி அதிபராக தோ்வு செய்யப்படுபவா் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 10-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப் பதிவில் யாருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால், முதல் 2 இடத்தில் உள்ளவா்களிடையே இறுதிக்கட்ட வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களில் பிரஞ்சு குடியுரிமை பெற்றவா்கள் வாக்களித்தனா். காரைக்கால் தெய்தா வீதியில் உள்ள பிரெஞ்சுக் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் வாக்காளா்கள் வாக்களித்தனா். இப்பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ள நிலையில், காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் சொற்ப சதவீதத்தினரே வாக்களித்தனா்.

புதுச்சேரியிலிருந்து வந்த பிரெஞ்சு தூதரக அதிகாரிகள் மற்றும் தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்காளா்கள் தங்களது பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை ஆவணத்தைக் காட்டி வாக்களித்தனா்.

வாக்குப் பதிவு முடிந்ததும் காரைக்காலிலேயே ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குகள் எண்ணப்பட்டு, புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்துக்கு விவரம் தெரிவிக்கப்படும் எனத் தோ்தல் அலுவலக வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com