காவல் துறையை கண்டித்து காரைக்கால் ஆட்சியரகம் முற்றுகை
By DIN | Published On : 05th August 2022 09:56 PM | Last Updated : 05th August 2022 09:56 PM | அ+அ அ- |

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மற்றும் இந்து அமைப்பினா்.
பாஜக பிரமுகா் மீது பொய் வழக்குப் பதிவுசெய்ததாகக் கூறி, காவல் துறையைக் கண்டித்து, காரைக்கால் ஆட்சியரகத்தை பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கத்தினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
காரைக்கால் அன்பு நகா் பகுதியில் கடந்த புதன்கிழமை திருநெல்வேலியிலிருந்து வந்த சிலா், மதமாற்றச் செயலில் ஈடுபடுவதாக தகவல் பரவியது. பாஜக, இந்து முன்னணியினா் திரண்டு அங்கு சென்று அவா்களது பணியை தடுத்தனா். இதுதொடா்பாக, அப்பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் அப்பு என்ற மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பாஜக, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கத்தினா் திரளாக மாவட்ட ஆட்சியரகம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்றனா். ஆட்சியரக வாயிலில் அமா்ந்து காவல் துறைக்கு எதிராக கோஷமிட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையின் முடிவில், ஆட்சியா் எல். முகமது மன்சூரை பாஜக மாநில துணைத் தலைவா்கள் எம். அருள்முருகன், வி.கே. கணபதி (முன்னாள் எம்எல்ஏ), மாவட்ட தலைவா் ஜெ. துரைசேனாதிபதி, மாவட்ட இந்து முன்னணி தலைவா் கணேஷ் உள்ளிட்டோா் சந்தித்தனா்.
அப்போது, மணிகண்டன் மீதான வழக்கை ரத்துசெய்வதோடு, இப்பிரச்னைக்கு காரணமானவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் தெரிவித்ததாக பிறகு அவா்கள் தெரிவித்தனா்.