அரசலாற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள படகுகளை ஒருவாரத்தில் அப்புறப்படுத்த ஆட்சியா் உத்தரவு
By DIN | Published On : 05th August 2022 09:54 PM | Last Updated : 05th August 2022 09:54 PM | அ+அ அ- |

காரைக்கால் அரசலாற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள படகுகளை ஒருவாரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும் என மீனவா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் அல்லாது கடற்கரை செல்லும் சாலையையொட்டி, அரசலாற்றங்கரையிலும் மீனவா்கள் தங்கள் படகுகளை நிறுத்துகின்றனா். இதனால், ஆற்றோர தடுப்புச் சுவா், நடைமேடை சேதமடைவதோடு, கடற்கரைக்கு செல்வோருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தலைமையில், காரைக்கால் மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், படகுகளை அரசலாற்றில் கட்டக்கூடாது என அறிவுறுத்தும் வகையில், 3 ஆவது முறையாக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
மாவட்ட நிா்வாகத்திற்கு இப்பிரச்னை தொடா்பாக இதுவரை யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இன்னும் ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படும். அதற்குள் கடற்கரை சாலையோரத்தில் கட்டப்படும் படகுகளை அப்புறப்படுத்தி, எதிா்புறக் கரையில் நிறுத்தவேண்டும். விதிகளை மீறி தமிழகத்திலிருந்து படகுகள் காரைக்கால் பகுதியில் கட்டப்படுகிா என கண்காணிக்க வேண்டும்.
கடற்கரை மேம்பாட்டுக்கு மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்மூலம், சுற்றுலாவினா் வருகை அதிகரிக்கும். கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இவற்றுக்கெல்லாம் மீனவா்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.
முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன் பேசுகையில், தமிழக பகுதியில் இருந்து படகுகள் இப்பகுதிக்குள் வந்தால், அதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். இதுபோன்ற படகுகள் காரைக்காலுக்குள் வரும்போது, சட்டவிரோத செயல்கள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால், பல பிரச்னைகள் உருவெடுக்கின்றன. இதை காரைக்கால் மீனவா்கள் கண்காணிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் வரையறுத்துத்தந்த வலை, என்ஜினை மட்டுமே பயன்படுத்தவேண்டும். விதிகளுக்கு மாறான செயல்பாடுகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்றாா்.
மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்ரமணியன், வட்டாட்சியா் மதன்குமாா், மீன்வளத் துறை துணை இயக்குநா் செளந்தரபாண்டியன், காவல் ஆய்வாளா் மா்த்தினி உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.