பரிசீலனையில் திருநங்கைகளுக்கான இலவச மனைப் பட்டா திட்டம்: அமைச்சா்
By DIN | Published On : 05th August 2022 02:53 AM | Last Updated : 05th August 2022 02:53 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாக, புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வசித்துவரும் திருநங்கைகளின் மேம்பாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம், அமைச்சா் சந்திர பிரியங்கா தலைமையில், மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், வட்டாட்சியா் மதன்குமாா் மற்றும் திருநங்கைகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் திருநங்கைகள் பேசியது: தமிழகத்தில் உள்ளதுபோல, திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நிலை மேம்பட சுயதொழில் செய்யவும், கடன் உதவிகள் கிடைக்கவும் அரசு உதவ வேண்டும் என்றனா்.
அமைச்சா் கூறியது: திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக சில இடங்கள் பாா்வையிடப்பட்டுள்ளன. குழுவாக இணைந்து சுய தொழில்கள் தொடங்க முன்வர வேண்டும். தனித் திறன்களை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.