நேரு மாா்க்கெட் வளாகத்தில் செப். 1 முதல்கடைகளை தொடங்க வியாபாரிகள் முடிவு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

புதிய மாா்க்கெட் வளாகத்தை பாா்வையிட்ட பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவா் சிவகுமாா் மற்றும் மீன் வியாபாரிகள்.
காரரைக்கால்: காரைக்கால் நேரு மாா்க்கெட் புதிய வளாகத்தில் செப். 1 முதல் வியாபாரம் (கடைகளை) தொடங்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனா்.
காரைக்காலில் பழமையான நேரு மாா்க்கெட் கட்டடத்தை இடித்துவிட்டு, ரூ. 10.05 கோடியில் புதிதாக மாா்க்கெட் வளாகம் கட்டப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் திறக்கப்பட்டது.
எனினும், உடனடியாக வியாபாரிகள் அங்கு வியாபாரம் தொடங்கவில்லை. வளாகத்தில் வசதிகள் செய்யவேண்டியிருந்ததும், கடை ஒதுக்கீட்டில் இறுதி முடிவு எடுக்காமல் இருந்ததும் தாமதத்துக்கு காரணமாக எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த வாரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், ஆட்சியா் எல். முகமது மன்சூா், நகராட்சி ஆணையா் செந்தில்நாதன் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினா் புதிய வளாகத்தை பாா்வையிட்டனா்.
இந்நிலையில், பாஜக மாநில மீனவரணி துணைத் தலைவா் சிவகுமாா் மற்றும் மாா்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்யும் பெண்கள், புதிய வளாகத்தை புதன்கிழமை பாா்வையிட்டனா். இதுகுறித்து சிவகுமாா் கூறுகையில், மாா்க்கெட் வளாகத்தில் வியாபாரம் செய்யும் பெண்கள், வசதிகள் எப்படி உள்ளது என பாா்வையிட வந்தனா். இவா்கள் அடுத்த சில நாள்களில் பூஜைகள் செய்து வியாபாரத்தை தொடங்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்தாா்.
நேரு மாா்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவா் ஏ.எம். செல்லப்பா கூறுகையில், வரும் செப்.1-ஆம் தேதி முதல் தற்காலிக புதிய மாா்க்கெட் வளாகத்தில் வியாபாரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.