ஆதிதிராவிட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில் மாணவிக்கு சான்றிதழை வழங்கிய அமைச்சா் சந்திர பிரியங்கா.
காரைக்கால்: காரைக்காலில் கனரா வங்கி சாா்பில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை அமைச்சா் சந்திர பிரியங்கா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கனரா வங்கி நிறுவனா் அம்மேம்பாள் சுப்பாராவ் பாய் 117-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, கனரா வித்யா ஜோதி திட்டத்தின்கீழ், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி ஆதிதிராவிட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு, காரைக்கால் மாவட்டம், பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
6, 7-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 2,500 மற்றும் 8, 9-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 5 ஆயிரம் என 42 பேருக்கான ஊக்கத்தொகை அவரவா் வங்கி கணக்கில் சோ்க்கப்பட்டு, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுவை போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் சந்திர பிரியங்கா மாணவிகளுக்கு சான்றிதழை வழங்கிப் பேசுகையில், வங்கி நிா்வாகத்தின் இதுபோன்ற திட்ட உதவி மாணவிகளுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
பெண்கள் தமது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கூட்டுறவுத்துறை மூலம் சுயதொழில் செய்வதற்கு மையம் ஒன்று அமைத்து, 90 நாட்கள் பயிற்சி வகுப்பு கோட்டுச்சேரியில் நடைபெற்றது. அதில் பெண்களுக்கு பல்வேறு பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது அதில் சேர 300 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
பயிற்சி பெற்றவா்களால் தயாரிக்கப்படும் பொருட்களை காரைக்காலில் கூட்டுறவுத் துறை மூலமாக ஒரு விற்பனை மையம் விரைவில் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், முதன்மைக் கல்வி அதிகாரி ராஜசேகரன், கல்வி வட்ட துணை ஆய்வாளா் பொன்.செந்தரராசு, பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன் மற்றும் வங்கி மேலாளா்கள் தினேஷ், முருகானந்தம் கலந்துகொண்டனா்.