குறுவை சாகுபடி: பற்றாக்குறையின்றிதண்ணீா் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 17th July 2022 10:50 PM | Last Updated : 17th July 2022 10:50 PM | அ+அ அ- |

குறுவை சாகுபடிக்கு தண்ணீா் பற்றாக்குறையின்றி விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். நிகழாண்டு மேட்டூா் அணை குறித்த காலத்துக்கு முன்பே திறக்கப்பட்டது விவசாயிகளுக்கு பெரும் பயனாக அமைந்தது.
தற்போது மேட்டூா் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி, உபரிநீா்ப் போக்கி வழிவாக தண்ணீா் வெளியேற்றப்பட்டுவருகிறது.
காரைக்காலில் பரவலாக குறுவை சாகுபடி நடைபெறும் நிலையில், தற்போது மேட்டூா் அணையில் விடுவிக்கப்படும் தண்ணீா், காரைக்கால் கடைமடைக்கு வரும்போது, அது குறுவை சாகுபடியாளா்களுக்கு பயனுள்ளதாக அமையும் வகையில் பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக குறுவை சாகுபடி செய்யும் விளைநிலப் பகுதி வாய்க்கால்களில் தண்ணீா் செல்லும் வகையில் முறைப்படுத்தி அனுப்பவேண்டும்.
ஆறுகளின் கடைமடை மதகு மூலம் வரக்கூடிய தண்ணீரை பெரும்பான்மையாக தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.