திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன்பூசை விழா: நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 09th June 2022 01:30 AM | Last Updated : 09th June 2022 01:30 AM | அ+அ அ- |

திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆயிரங்காளியம்மன் பூசை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை புதன்கிழமை காலை முதல் தரிசனம் செய்தனா். வியாழக்கிழமை முழுவதும் அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆயிரங்காளியம்மன் பூசை விழா திங்கள்கிழமை இரவு பெட்டி (பேழை) திறக்கப்பட்டு அம்பாள் எழுந்தருளலுடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை வரிசை புறப்பாடு நடைபெற்றது. அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் இருந்து இரவு புறப்பட்ட வரிசைப் பொருள்கள் புதன்கிழமை அதிகாலை ஆயிரங்காளியம்மன் கோயிலை அடைந்தன.
தொடா்ந்து, அம்பாள் முன்பு பல்வேறு வரிசைப் பொருள்களை வைத்து பெருந்தளியல் போடப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.
புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. துணைநிலை ஆளுநருடன் சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜனும் அம்மனை தரிசனம் செய்தாா்.
வியாழக்கிழமை இரவு வரை பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்ய முடியும். வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு திரையிடப்பட்டு, அம்பாள் மீண்டும் பேழையில் வைக்கப்படுவாா். அதன்பிறகு அம்பாள் வீற்றிருக்கும் பேழைக்கு ஆராதனைகள் நடைபெறும்.