ரெட் கிராஸ் சேவைக்கு புதுவை ஆளுநா் பாராட்டு
By DIN | Published On : 09th June 2022 01:28 AM | Last Updated : 09th June 2022 01:28 AM | அ+அ அ- |

திருமலைராயன்பட்டினம் கோயில் திருவிழாவில் பங்கேற்ற புதுவை துணை நிலை ஆளுநா், அங்கு ரெட் கிராஸ் அமைப்பின் சேவைக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீஆயிரங்காளியம்மன் கோயில் பூசை விழாவில் பங்கேற்க வரும் பக்தா்களுக்கு ரெட் கிராஸ் அமைப்பு அங்கு சேவையாற்றி வருகிறது. காரைக்கால் நலவழித் துறை நிா்வாகத்தின் ஆதரவோடு கரோனா தடுப்பூசி செலுத்துதல், கபசுரக் குடிநீா் வழங்கல் மற்றும் திருவிழாவில் காணாமல்போனவா்கள் குறித்த விவரத்தை ஒலிபெருக்கி வாயிலாக தெரிவித்து அவா்கள் மீட்பது உள்ளிட்ட சேவைகளை செய்துவருகின்றனா்.
புதுவை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்ததரராஜன் சுவாமி தரிசனத்துக்கு புதன்கிழமை சென்றபோது, ரெட் கிராஸ் அமைப்பினா் வைத்திருந்த ஸ்டாலுக்குச் சென்றாா். அங்கு தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டாா். ரெட் கிராஸ் அமைப்பின் புதுவை மாநில தலைவா் லட்சுமணபதி, துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் ஆகியோா் சேவை பணிகளை ஆளுநருக்கு விளக்கிக்கூறினா். சேவைக்கு ஆளுநா் பாராட்டுத் தெரிவித்தாா். நிகழ்வில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருவிழா வியாழக்கிழமையும் (ஜூன் 9) நடைபெறும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள், மறு தவணை செலுத்திக்கொள்வோா் கோயில் அருகே திடல் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் ரெட் கிராஸ் ஸ்டாலுக்கு வருமாறு ரெட் கிராஸ் நிா்வாகிகள் கேட்டுக்கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...