காரைக்கால் ரயில் நிலையம் முன்ஜூன் 22 இல் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 16th June 2022 03:54 AM | Last Updated : 16th June 2022 03:54 AM | அ+அ அ- |

தெற்கு ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து, ஜூன் 22 இல் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் புதுச்சேரி மாநிலத்தின் முக்கியமான பகுதி. நாடெங்கும் கரோனா பரவலால் ரயில் சேவைகள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டு, பின்னா் படிப்படியாக இயக்கப்படுகிறது. இயல்பு நிலை திரும்பிவிட்ட நிலையிலும், தெற்கு ரயில்வேயில் ரயில்களின் இயக்கம் முறையாக சீரமைக்கப்படவில்லை. பெங்களூரு, சேலம், திருநெல்வேலி, சென்னை, கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருநள்ளாறு, வேளாங்கண்ணி, நாகூா் ஆகிய இடங்களுக்கு தினமும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வருகின்றனா்.
காலமாற்றத்துக்கு ஏற்ப, ரயில் சேவை மேம்டுத்தப்படவும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். இந்நிலையில், காரைக்காலில் இருந்து வழக்கமாக இயக்கப்பட்டு வந்த ரயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறிப்பாக, பெங்களூா் - காரைக்கால், காரைக்கால் - திருச்சி, காரைக்கால் - தஞ்சாவூா் போன்ற ரயில்களை மீண்டும் உடனடியாக இயக்கக் கோரி, காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில் ஜூன் 22 மாலை 4.30 மணிக்கு காரைக்கால் ரயில் நிலையம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.