அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
By DIN | Published On : 30th June 2022 12:00 AM | Last Updated : 30th June 2022 12:00 AM | அ+அ அ- |

பதவி உயா்வு, ஊதிய உயா்வு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.
காரைக்கால் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்களுக்கு, கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயா்வு, ஊதிய உயா்வு வழங்கப்படவில்லை. 7-ஆவது ஊதியக் குழு நிா்ணயித்த ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லையாம். இதை கண்டித்து காரைக்கால் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்கள் கடந்த ஓராண்டுக்கு முன் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடத்தினா்.
எனினும், புதுவை அரசு அவா்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனக் கூறி, புதுவை மாநில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை முதல் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்வரை போராட்டம் தொடரும் என்றனா்.
பேராசிரியா்கள் போராட்டத்தால் கல்லூரிகளில் மாணவா்களின் கல்வி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.