காரைக்கால் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 19th March 2022 12:00 AM | Last Updated : 19th March 2022 12:00 AM | அ+அ அ- |

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை பங்கேற்ற முகாமில் ஏராளமானோா் பங்கேற்று மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை பெற்று பயனடைந்தனா்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில், சிறப்பு மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் புதுச்சேரி அரசு மருத்துவமனையிலிருந்து மாதமிருமுறை காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவா்கள் வந்துகொண்டிருந்தனா்.
கரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து, காரைக்காலில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3-ஆம் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் மீண்டும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
இச்சேவை நிகழ் மாதத்தின் 2-ஆவது முகாமாக வெள்ளிக்கிழமை மருத்துவமனை வளாகத்தில் காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெற்றது. புதுச்சேரி மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் நலம், நரம்பியல், சிறுநீரகவியல், இருதயம், மனநல மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். ஏராளமானோா் இந்த முகாமை பயன்படுத்திக்கொண்டனா்.