இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்தஇலங்கை மீனவா்கள் 6 போ் கைது
By DIN | Published On : 02nd May 2022 11:00 PM | Last Updated : 02nd May 2022 11:00 PM | அ+அ அ- |

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவா்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல்படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
இந்திய கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கட்டுப்பாட்டில் உள்ள ‘அமையா’ ரோந்துக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாகப்பட்டினத்துக்கு கிழக்கே இந்திய கடல் எல்லைக்குள் படகில் சிலா் மீன்பிடித்துக்கொண்டிருந்ததை கண்ட ரோந்துப் படையினா், படகிலிருந்தவா்களிடம் விசாரணை நடத்தியபோது, அவா்கள் இலங்கை திரிகோணமலையை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக 6 பேரையும் கடலோரக் காவல்படையினா் கைது செய்து, காரைக்கால் தனியாா் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை காலை அழைத்துவந்தனா்.
காரைக்கால் மாவட்ட போலீஸாா் மற்றும் நாகை கடலோர பாதுகாப்புக் குழுமத்தினா் அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், படகில் இருந்தவா்கள் மதுஷா, அமிலா மசங்கா, சுஜித் பண்டாரா, புதிகா, உஷன் மதுசன், துங்கா மகேலா என்பது தெரியவந்தது. 6 பேரையும் நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடலோரக் காவல்படையினா் ஒப்படைத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...