மொழி ஆளுமையை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்
By DIN | Published On : 21st October 2022 02:16 AM | Last Updated : 21st October 2022 02:16 AM | அ+அ அ- |

பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சந்திர பிரியங்கா. உடன், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன்.
மொழி ஆளுமையை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் புதுவை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா.
காரைக்கால் அருகேயுள்ள கோட்டுச்சேரியில் வியாழக்கிழமை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், ரூ. 2.88 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பேசியது: புதுவை முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்ற பிறகு இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு கிடைத்துவருகிறது. ஆதிதிராவிட மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையை அரசு வழங்குகிறது. மாணவா்கள் ஆங்கில மொழியில் பேச சிரமப்படுகின்றனா். எனவே, மொழி ஆளுமையை மாணவா்கள் வளா்த்துக்கொள்ளவேண்டும். விடுதியில் தங்கியிருக்கும் மாணவா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சியளிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், 276 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை, கலப்புத் திருமண உதவி, அமுதூட்டும் தாய்மாா்களுக்கு உதவி, வீடுகட்டும் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், எம்எல்ஏக்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநா் யஸ்வந்தய்யா, உதவி இயக்குநா் மதன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.