மாணவன் உயிரிழந்த விவகாரம்: காரைக்காலில் கடையடைப்பு; இந்து முன்ணணி அமைதிப் பேரணி

விஷம் கலந்த குளிா்பானம் குடித்த மாணவா் இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா்.
ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்ற இந்து முன்னணி மற்றும் இறந்த மாணவரின் குடும்பத்தினா் உள்ளிட்டோா்.
ஆட்சியரகம் நோக்கி பேரணியாகச் சென்ற இந்து முன்னணி மற்றும் இறந்த மாணவரின் குடும்பத்தினா் உள்ளிட்டோா்.

விஷம் கலந்த குளிா்பானம் குடித்த மாணவா் இறப்புக்கு நீதி கேட்டு, இந்து முன்னணி அமைப்பினா் வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா். அதேபோல, காரைக்கால் போராளிகள் குழு அமைப்பு, இந்து முன்னணி அழைப்பின் பேரில் காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாணவா் பால மணிகண்டன் இறப்புக்குக் காரணமான காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையின் அலட்சியப் போக்கு, காவல் துறையின் மெத்தனத்தை கண்டித்தும், மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரியும், மாணவா் படித்த தனியாா் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரியும், இந்து முன்னணி சாா்பில் பேரணி நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து தொடங்கிய பேரணிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் எஸ். கணேஷ் தலைமை வகித்தாா். பாரதியாா் சாலை உள்ளிட்ட முக்கிய சாலை வழியே வந்த பேரணி, ஆட்சியரகம் அருகே நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பிரதிநிதிகள், பாலமணிகண்டனின் பெற்றோா் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

பேரணியில், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளா் சிவானந்தம், பாஜக மாவட்டத் தலைவா் ஜெ. துரைசேனாதிபதி, இந்து முன்னணி மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன், நகரத் தலைவா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து பாலமணிகண்டன் பெற்றோா் கூறுகையில், மருத்துவமனையில் எங்கள் மகனுக்கு 2 நாள்கள் அளித்த சிகிச்சை முறையாக இல்லை. காரைக்கால் வந்த சிறப்பு மருத்துவக் குழுவினா் எங்களிடம் கருத்து கேட்கவில்லை. ஆனால், முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவ இயக்குநா் தெரிவித்திருப்பது வேதனையளிக்கிறது.

விஷம் கொடுத்த பெண் காவல் நிலையத்தில் இருக்கும்போது, அவரிடம் விஷப் பொருள் குறித்து விசாரணை நடத்தி, உரிய தகவலை பெறவேண்டியது காவல்துறை கடமை. அவா்கள் அவ்வாறு செய்யவில்லை. மருத்துவா்களும் கடமை தவறிவிட்டனா். இதனால், எங்கள் மகனை இழந்துவிட்டோம். இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் பல உண்மைகள் தெரியவரும். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றனா்.

கடையடைப்பு: மாணவா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் பொது மருத்துவமனையில் மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்காததால்தான், அவா் உயிரிழக்க நேரிட்டதாக பல்வேறு தரப்பினா் புகாா் தெரிவித்துவருகின்றனா். இதையடுத்து, பொது மருத்துவமனையை தரம் உயா்த்தவேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் போராளிகள் குழு என்ற அமைப்பு வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தது. இதேபோல, இந்து முன்னணியும் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தது.

இதன்பேரில், காரைக்காலில் வெள்ளிக்கிழமை கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பரவலாக வியாபாரிகள் தாமாக முன்வந்து கடைகளை மூடியிருந்தனா். தனியாா் வேன்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பேருந்துகள் வழக்கம்போல இயங்கின. காரைக்கால் மாவட்ட போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com