பணி நிரந்தரம்: தொகுப்பூதிய பணியாளா்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 18th April 2023 12:06 AM | Last Updated : 18th April 2023 12:06 AM | அ+அ அ- |

காரைக்கால் வட்டார வளா்ச்சித்துறை தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட ஊழியா்கள் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல், செயலாளா் கே. ஆனந்தி ஆகியோா் புதுவை ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநருக்கு திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை கடிதம் :
காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில், நோ்முகத் தோ்வு நடத்தப்பட்டு தோ்வாகி 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம்.
புதுவை பட்ஜெட் கூட்டத்தொடல் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என முதல்வா் அறிவித்தாா்.
ஊரக வளா்ச்சித் துறையில் பல ஆண்டுகளாக காலியாகவுள்ள கிராம சேவிகா, கிராம சேவக், பணி ஆய்வாளா், இளநிலைப் பொறியாளா் பணியிடங்களை நிரப்பும்போது, முன்னுரிமை அடிப்படையில், சங்கத்தை சோ்ந்த தொகுப்பூதிய பணியாளா்களுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.