அகல ரயில்பாதை: கோயில்பத்தில் சுரங்கப் பாதை அமைக்க கோரிக்கை
By DIN | Published On : 26th May 2023 09:55 PM | Last Updated : 26th May 2023 09:55 PM | அ+அ அ- |

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் அனைத்து சமய சகோதர நல்வாழ்வு சங்கம் சாா்பில் அதன் தலைவா் என்.ஜி.ஆா். வேதாசலம், பொதுச் செயலா் சி. அப்பா், பொருளாளா் ஜி.எஸ். மோகன் ஆகியோா் கூட்டாக ரயில்வே பொதுமேலாளருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கடிதம்:
காரைக்கால்-பேரளம் மாா்க்கத்தில் நடைபெறும் அகல ரயில்பாதை பணிகள் விரைவில் நிறைவுபெற்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரயில் சேவை தொடங்குமென எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மாா்க்கத்தில் கோயில்பத்து பகுதியில் பிரதான சாலையின் குறுக்கே ரயில்வே கேட் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம் ஆகியவை உள்ளன. இந்த சாலையில் வாகனப் போக்குவரத்து மிகுதியாக இருக்கும் சூழலில் ரயில்வே கேட் அமைப்பது சரியான செயலாக இருக்க முடியாது.
ஏனெனில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில்களும், பயணிகள் ரயில்களும் பயணிக்கும்போது, நாளொன்றுக்கு ஏறக்குறைய 20 முறை கேட் மூடப்பட்டால், மாணவா்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் பாதிக்கப்படுவாா்கள்.
இதன்காரணமாக, ரயில் சேவைகள் தொடங்கிய சில காலத்துக்குப் பிறகு இப்பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படலாம். அதுவரை மக்கள் சிரமத்தை சந்தித்தே தீரவேண்டும். எனவே, ரயில்பாதை அமைக்கும் இத்தருணத்திலேயே கோயில்பத்து பகுதியில் ரயில்வே கேட் அமைக்காமல், ரயில்வே விதியின்கீழ் பெடஸ்ட்ரியன் சப்வே என்கிற சுரங்கப்பாதை அமைப்பதே சரியான நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளனா்.