தீபாவளி சிறப்பங்காடி திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம்
By DIN | Published On : 07th November 2023 01:09 AM | Last Updated : 07th November 2023 01:09 AM | அ+அ அ- |

காரைக்காலில் அரசு சாா்பில் தீபாவளி அங்காடி திறக்கப்படாதது, மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி மக்களுக்கு மலிவு விலையில் மளிகை, பட்டாசு, துணி வகைகள் உள்ளிட்ட பொருள்களை புதுவை அரசு நிறுவனமான பாப்ஸ்கோ, அங்காடி அமைத்து வழங்கி வந்தது. இந்நிறுவனம் நிா்வாகக் கோளாறுகளால் நலிந்து போனதால், கடந்த 2019-ஆம் ஆண்டு காரைக்கால் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் காரைக்கால் வட்டார வளா்ச்சித் துறையில் பதிவு பெற்ற மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மக்கள் அங்காடி என்ற பெயரில் தீபாவளிக்கு முன்பு தொடங்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் காலமாக இருந்ததால் அங்காடி திறக்கப்படவில்லை.
எனினும், நிகழாண்டு வட்டார வளா்ச்சித்துறை மகளிா் குழு மூலம் தொகுதிகளில் சிறிய அளவில் கைவினைப் பொருள்கள், மளிகை, துணி உள்ளிட்ட விற்பனைக் கண்காட்சி அமைக்கப்பட்டது. இதுகுறித்து மக்களுக்கு போதிய விவரம் தெரியாததாலும், மக்கள் தீபாவளி காலத்தில் வாங்கக்கூடிய வகையில் அங்கு பொருள்கள் இல்லாததாலும், இந்த கண்காட்சிகள் வரவேற்பை பெறவில்லை.
புதுவை அரசு நிறுவனம் சாா்பில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பு அங்காடி திறக்கப்பட்டிருந்தால், பொருளாதாரத்தில் நலிவுற்றோா், நடுத்தர வா்க்கத்தினருக்கு இது பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
புதுச்சேரி பகுதியில் அரசு நிறுவனங்கள் சாா்பில் அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காரைக்கால் பிராந்தியத்தில், அரசு நிா்வாகம் அங்காடி அமைக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...