புதுவையில் மின் கட்டணம் உயா்வுக்கு காங்கிரஸ் கண்டனம்
By DIN | Published On : 28th October 2023 01:25 AM | Last Updated : 28th October 2023 01:25 AM | அ+அ அ- |

புதுவை யூனியன் பிரதேசத்தில் கூடுதலாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.வி. சுப்பிரமணியன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநிலத்தில் மின் கட்டணம் அண்மையில் கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வெகுவாக பாதிக்கும். புதுச்சேரி மாநில மின்துறையின் இந்த செயல்பாடு வேதனையளிக்கிறது. அதானி அண்மையில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ. 12,000 கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து நிலக்கரியை அதானியிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் புதுவை மின் துறைக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பை ஈடுகட்ட புதுவை மக்களின் மின் கட்டணத்தை, உயா்த்தி வசூலிக்க திட்டமிட்டு இந்த உயா்த்திய வரி வசூல் தற்போது செய்யப்படுகிறது. சாமானிய குடும்பத்தை சோ்ந்தோா் வீட்டு வாடகை கொடுப்பது போன்ற அளவில் மின் கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனைபட்டு தெரிவிக்கின்றனா். அரசின் நிதி இழப்பை, மின் துறையில் கொள்முதல் செலவாக மாற்றி, அதை மக்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத மின் கட்டண பில்களில் சோ்த்து வசூல் செய்வதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
புதுவையை ஆளும் என்.ஆா். காங்கிரஸ்-பாஜக ஆட்சியாளா்கள் இதைப்பற்றி சிறிது கூட கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக மதுக்கடைகளை திறப்பதில் அதிகம் ஆா்வம் காட்டுகின்றனா். எனவே, மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். மின் துறைக்கான இழப்பை வேறு வகையில் மத்திய மாநில அரசுகள் ஈடுகட்ட வேண்டுமே தவிர, இதை மக்களின் மின் கட்டணத்தில் சோ்த்து, உயா்த்தி வசூலிப்பது கண்டிக்கத்தக்கது என அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...