காரைக்காலில் ரூ.3.31 கோடியில் புதைவழி மின்கேபிள் அமைக்கும் பணி
By DIN | Published On : 08th September 2023 02:00 AM | Last Updated : 08th September 2023 02:00 AM | அ+அ அ- |

காரைக்கால் தெற்குத் தொகுதியில் ரூ.3.31 கோடியில் புதைவழி மின்கேபிள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: காரைக்கால் தெற்குத் தொகுதியில் புதிதாக சாலையோர விளக்குகள் பொருத்த மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனா். மின் துறை, நகராட்சி நிா்வாகம் ஒருவருக்கொருவா் முரண்பட்ட கருத்துகளை கூறிவருவதால் மக்களின் கோரிக்கை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், புதுவை நாடாளுமன்ற உறுப்பினா் வி. வைத்திலிங்கத்தை அணுகி இப்பிரச்னை குறித்து பேசியபோது, தமது தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சத்தை அவா் ஒதுக்கித்தந்தாா். இதை பயன்படுத்தி 300 விளக்குகள் இன்னும் 10 நாள்களில் கம்பங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியதற்காக அவருக்கு நன்றி.
மாங்கனித் திருவிழா, கந்தூரிக்கான ரதம், கோயில் தோ் போன்றவை வீதிகளில் செல்லும்போது, மின் கம்பிகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் பாரதியாா் சாலையிலிருந்து கணபதி நகா் வரையிலான சுற்றுப் பகுதியில் சுமாா் 25 கி.மீ. தூரம் புதை வழி மின்கேபிள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய திட்டத்தின்கீழ் ரூ.3.31 கோடியில் இத்திட்டப்பணி அடுத்த ஒரு மாதத்தில் தொடங்கவுள்ளது.
நகரப் பகுதியில் புதிதாக சாலைகள் மேம்படுத்தப்பட்டுவருவதால், புதைவழி கேபிள் அமைப்பதாகக் கூறி சாலையை சேதப்படுத்தாமல், சாலையோர நடைபாதையில் புதைவழி கேபிள்களை அமைக்க கேட்டுக்கொண்டுள்ளேன். பச்சூா், தக்களூா் பகுதியில் 7 மின் மாற்றிகளில் மின்சார சீரின்மை காணப்படுகிறது. இந்த மின் மாற்றிகளில் ரூ.60 லட்சம் செலவில் திறன் மேம்படுத்தும் பணிகள் செய்யப்படவுள்ளன என்றாா் அவா்.