

காரைக்கால்: காரைக்கால் அரசலாற்றங்கரை மேற்குப் புறமாக அமைக்கப்பட்ட நடைமேடையை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் அரசலாற்றின் மேற்குப்புறத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வி.கே. கணபதி முயற்சியால், 1.5 கி.மீ. தொலைவுக்கு ஆற்றோரத்தில் கான்கிரீட் தடுப்புடன் கூடிய நடைமேடை அமைக்கும் பணியை ரூ. 5 கோடியில் மத்திய சுற்றுலாத்துறை நிதியில் பொதுப்பணித்துறை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. இந்த நடைமேடையில் கான்கிரிட் இருக்கைகள் அமைத்து, விளக்குகள் பொருத்தப்பட்டன.
எனினும் இந்தப் பகுதியில் உள்ள சாராயக்கடையால், பொதுமக்கள் யாரும் இந்த நடைமேடையை பயன்படுத்த முன்வரவே இல்லை. மது அருந்துவோா் மட்டுமே நடைமேடையையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனா். மது பாட்டில்களைஉடைத்துச் செல்வதும், மதுபோதையில் நடைமேடையிலேயே மயங்கிக் கிடப்பதும், மனிதக் கழிவுகளாலும் நடைமேடை சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், பெண்கள், முதியோா், சிறுவா்கள் என யாருமே இந்த நடைமேடையை பயன்படுத்துவதில்லை. தற்போது நடைமேடையில் கருவேல மரங்கள் மண்டிக் காணப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ஏ.எம். இஸ்மாயில் கூறுகையில், பல கோடி ரூபாய் மதிப்பில் நல்ல நோக்கத்துடந் அமைக்கப்பட்ட மேற்குப்புற அரசலாற்றங்கரை நடைமேடை பயன்பாடற்ற நிலையில் உள்ளது வேதனையளிக்கிறது.
ஏற்கெனவே கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது புகாா் தெரிவித்தேன். உடனடியாக தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அதைத் தொடா்ந்து பராமரிக்க தவறிவிட்டனா். எனவே மாவட்ட ஆட்சியா் இந்த நடைமேடை பகுதியை ஆய்வு செய்து, இதை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.