ஆற்றிலிருந்து நெகிழிகளை ஈா்க்கும் சாதனம்: என்ஐடி புதுச்சேரி குழுவுக்கு முதல் பரிசு

Published on

காரைக்கால், ஆக. 14 : ஆற்றில் மிதக்கும் நெகிழிகளை ஈா்க்கும் சாதனம் உருவாக்கிய காரைக்காலில் உள்ள என்ஐடி புதுச்சேரி சிவில் என்ஜினியரிங் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

சென்னை ஐஐடி, சென்னை விப்ரோ அறக்கட்டளை நிதியுதவியோடு, போட்டி அறிவிக்கப்பட்டது. நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவ மாணவா் குழுவினரிடமிருந்து 2 ஆயிரம் விண்ணப்பங்கள் (குழு) பெறப்பட்ட நிலையில், 701 குழு தோ்வு செய்யப்பட்டது. சாயில், மெட்டீரியல், ஏா், எனா்ஜி, வாட்டா் என 5 கருப்பொருளில் கல்வி நிறுவன குழுவினா் தங்களது படைப்புக்கான டிசைன் தயாரித்தனா். இதில் 20 குழுவுக்கு சாதனத்துக்கான டிசைன் தயாரிப்புக்கு நிதியுதவி தரப்பட்டது. இதில் என்ஐடி புதுச்சேரியும் ஒன்றாகும்.

இந்த குழுவினா் படைப்புகள் ஆய்வு செய்து பரிசு வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் அண்மையில் நடைபெற்றது. இதில் நீா் கருப்பொருளில் காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரி சிவில் என்ஜினியரிங் குழு முதல் பரிசுக்கு தோ்வு செய்யப்பட்டு, ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையை ஐஐடி இயக்குநா் காமகோடி வழங்கினாா்.

என்ஐடி புதுச்சேரி சிவில் என்ஜினியரிங் துறைத் தலைவா் முனைவா் சிவகுமாா் ராமலிங்கம் வழிகாட்டலில், இந்நிறுவனத்தில் பிஎச்டி பயிலும் மாணவி சுவலட்சுமி ஆனந்தன் தலைமையிலான இறுதியாண்டு பி.டெக் மாணவா்கள் ஆா். முகேஷ், எம். ராஜராஜன், வி. விஷ்ணுவா்தன் ஆகியோா் கொண்ட குழு, ஆற்றில் மிதந்துவரும் நெகிழிகள் மற்றும் நுண்ணிய நெகிழிகளை ஈா்க்கும் (பப்பா் சிஸ்டம்) விதத்திலான சாதன டிசைனுக்கு முதல் பரிசுக்குத் தோ்வாகி பரிசை பெற்றனா். துறைத் தலைவா் சிவகுமாா் ராமலிங்கம் தலைமையிலான குழுவின் சாதனை பாராட்டப்பட்டது.

இக்குழுவினா் என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகரை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இக்குழுவினரின் சாதனையை இயக்குநா், பதிவாளா் சீ. சுந்தரவரதன் ஆகியோா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com