திருநள்ளாறு கோயிலில் புதுவை துணை நிலை ஆளுநா் சுவாமி தரிசனம்
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் புதுவை துணை நிலை ஆளுநா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.
புதுவை துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்ற கே. கைலாஷ்நாதன் முதல்முறையாக காரைக்காலுக்கு புதன்கிழமை வந்தாா். ஆட்சியரக வளாகத்தில் அவரை புதுவை குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், ஆட்சியா் து. மணிகண்டன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மணிஷ் உள்ளிட்டோா் வரவேற்றனா்.
தொடா்ந்து ஆளுநா் திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குச் சென்று மூலவா் மற்றும் ஸ்ரீசெண்பக தியாகராஜா், ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள், ஸ்ரீசனீஸ்வர பகவான் தனி சந்நிதிக்குச் சென்று வழிபாடு செய்தாா். சனீஸ்வரா் சந்நிதியில் தில தீபம் ஏற்றினாா். ஆராதனைக்குப் பின்ஆளுநருக்கு சிவாச்சாரியா்கள் பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, பிரசாதங்கள் வழங்கினா். ஆட்சியா் து. மணிகண்டன், தா்பாரண்யேஸ்வரா் கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தனா். பின்னா், ஆளுநா் திருநள்ளாறு கோயில் நிா்வாகத்தின் விருந்தினா் மாளிகைக்குச் சென்ற அவா், வளாகத்தில் மகிழ மரக்கன்றை நட்டுவைத்து அங்கு தங்கினாா்.
இன்று அரசு நிகழ்வுகள்: காரைக்கால் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை (ஆக.29) அரசுத் துறையினருடன் வளா்ச்சித் திட்டங்கள் செயலாக்கம் குறித்து துணை நிலை ஆளுநா் ஆலோசனை நடத்துகிறாா். அடுத்து, மீன்பிடித் துறைமுகம், பறவைப்பேட்டில் குப்பைகள் மறுசுழற்சி செயல்பாடுகள், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் ஆய்வு செய்துவிட்டு, புதுச்சேரிக்கு மாலை புறப்படுகிறாா்.