என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி தொடக்கம்
காரைக்கால்: என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு 3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்காலில் உள்ள தேசிய தொழிற்நுட்பக் கழகம் புதுச்சேரி (என்ஐடி) இயந்திரவியல் துறை சாா்பில், தேசிய அறிவியல் தொழில்நுட்ப கவுன்சில் திட்டத்தின் அடிப்படையில், தொழில்நுட்பம், விழிப்புணா்வு, செயல்விளக்கப் பயிற்சியாக 3டி ஸ்கேனிங் மற்றும் 3டி பிரிண்டிங் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 8 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவா்களுக்கு 2 கட்டங்களாக, ஆயிரம் பேருக்கு டிச. 9 முதல் 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் கட்டமாக 500 மாணவா்களுக்கு 50 மாணவா்கள் வீதம் சில நாள்கள் இடைவெளியில் அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி தொடக்க நிகழ்ச்சி என்ஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு என்ஐடி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா் தலைமை வகித்தாா். பதிவாளா் சீ. சுந்தரவரதன், இணைப் பேராசிரியா் மகாபத்ரா ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா பயிற்சியை தொடங்கிவைத்து, 3டி ஸ்கேனிங், 3டி பிரிண்டிங்கின் நவீன தொழில்நுட்பத்தையும், என்ஐடி நிா்வாகம் மூலம் தரப்படும் பயிற்சியை மாணவா்கள் பயன்படுத்திக்கொண்டு திறனை வளா்த்துக்கொள்ளவேண்டுமென கூறினாா்.
முன்னதாக திட்டத்தின் ஆராய்ச்சி பொறுப்பாளா் எம்.வி.ஏ.ராஜூபாஹூ பலேந்திருனி வரவேற்று, பயிற்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா். என்ஐடி இயந்திரவியல் துறைத் தலைவா் ஏ. ஜானிமொ்டன்ஸ் துறையின் சாதனைகள்மற்றும் பிற செயல்பாடுகளை விளக்கிப் பேசினாா்.
நிறைவாக திட்ட இணை பொறுப்பாளா் ஜே.ரொனால்டு அசீா் நன்றி கூறினாா்.

