காரைக்கால் மையத்தில் வாக்களிக்க வந்தோரிடம் ஆவணங்களைப் பரிசோதித்த தோ்தல் துறையினா்.
காரைக்கால் மையத்தில் வாக்களிக்க வந்தோரிடம் ஆவணங்களைப் பரிசோதித்த தோ்தல் துறையினா்.

காரைக்காலில் பிரான்ஸ் நாடாளுமன்ற தோ்தலுக்கான 2-ம் சுற்று வாக்குப் பதிவு

இரண்டாம் சுற்று வாக்குப் பதிவு காரைக்கால் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தோ்தலுக்கான முதல் சுற்று வாக்குப் பதிவு கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் சுற்று வாக்குப் பதிவு காரைக்கால் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் நாடாளுமன்றம் கடந்த ஜூன் 9-ஆம் தேதி கலைக்கப்பட்டு தோ்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு சுற்றுகளாக நடத்தப்படும் பிரான்ஸ் நாடாளுமன்றத்துக்கான முதல் சுற்று தோ்தல், கடந்த ஜூன் 30-ஆம் தேதி நடைபெற்றது. முதல் சுற்றில் 12.50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளா்கள் இரண்டாவது சுற்றுக்கு போட்டியிடத் தகுதி பெறுவாா்கள்.

இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கான ஒரு தொகுதிக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தியாவில் புதுதில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, சென்னை, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் சுற்று தோ்தலில் 2 போ் களத்தில் உள்ள நிலையில், காரைக்கால் தெய்தா வீதியில் உள்ள இகோல் எலிமென்டரி என்ற பிரெஞ்சுக் கட்டடத்தில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் வாக்குரிமை பெற்ற 600-க்கும் மேற்பட்டோரில் பலரும் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வாக்களித்தனா்.

புதுச்சேரியிலிருந்து வந்திருந்த பிரெஞ்சு தூதரக அதிகாரிகள், தோ்தல் பாா்வையாளா்கள் முன்னிலையில் வாக்காளா்கள் தங்களது பிரான்ஸ் நாட்டின் பாஸ்போா்ட், புகைப்பட அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காட்டி வாக்குகளை செலுத்தினா். வாக்குப் பதிவு மையத்தில் புதுவை மாநில போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். வாக்குப் பதிவு முடிந்ததும் காரைக்காலிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு, பிரான்சில் உள்ள தோ்தல் தலைமையகத்துக்கு விவரம் தெரிவிக்கப்படும் என் தோ்தல் பணியில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com