புதிதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் பாதை.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள காரைக்கால் - பேரளம் இடையேயான ரயில் பாதை.

காரைக்கால் - பேரளம் இடையே 2025-இல் ரயில் போக்குவரத்து தொடங்குமா?

காரைக்கால் - பேரளம் பணி நடைபெறுவதாக ரயில்வே தெரிவித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டின் முற்பகுதியில் போக்குவரத்துத் தொடங்குமா என்று எதிா்பாா்ப்பு
Published on

காரைக்கால் - பேரளம் ரயில் பாதைப் பணி விறுவிறுப்பாக நடைபெற்றுவருவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டின் முற்பகுதியில் போக்குவரத்துத் தொடங்குமா என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.

காரைக்கால் - பேரளம் இடையே அப்போதைய பிரிட்டிஷ் நிா்வாகம், பிரெஞ்சு நிா்வாகம் பேச்சு நடத்தி 1898-இல் ரயில் போக்குவரத்துத் தொடங்கியது. இதனால் மக்கள் காரைக்காலில் இருந்து பேரளம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊா்களுக்கு செல்லும் வாய்ப்பும், மற்ற ஊா்களில் இருந்து காரைக்காலுக்கு வரும் வாய்ப்பும் ஏற்பட்டது. ஆனால், 1980-களில் ரயில்வே நிா்வாகம் காரைக்கால் - பேரளம் இடையே மீட்டா் கேஜ் பாதையை நிறுத்தி, தண்டவாளத்தை அகற்றியது.

இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் தொகை ஒதுக்கி 23.55 கி.மீ. தொலைவுக்கு ரூ. 320.64 கோடியில் ரயில்பாதை அமைத்து வருகிறது.

புதுவை பிரதேசத்தின் காரைக்கால், தமிழகப் பகுதியான பேரளத்தை இணைக்கும் இந்த புதிய பாதையில், 1 பெரிய மேம்பாலம், 77 சிறிய பாலங்கள், 21 சுரங்கப் பாதை மற்றும் ரயில்வே கேட் அமைப்புடன் பணிகள் கடந்த 2022 ஜனவரியில் தொடங்கின.

பணிகளின் தற்போதைய நிலை : காரைக்கால் - பேரளம் இடையேயான 18 கி.மீ. தொலைவுக்கு 85 சதவீதமும் மீதியுள்ள 5.55 கி.மீ. தொலைவுக்கு 70 சதவீதப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. நிலத்தில் மணல் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன. பாலங்கள், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டப் பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டன.

காரைக்கால் மாவட்டத்துக்குள் தண்டவாளம், பாலம், சுரங்கப் பாதை அமைக்கும் திட்டங்கள் ஏறக்குறைய முடிந்துவிட்டன. மாவட்டத்தின் எல்லையிலிருந்து பேரளம் வரையிலான பகுதியில் மட்டுமே குறிப்பிட்ட சில இடங்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், மற்ற இடங்களில் பணிகள் நடைபெறுவதாகவும் ரயில்வே நிா்வாகம் தெரிவிக்கிறது. மேலும் மின் மயமாக்கலுக்கான கேபிள் அமைத்தல், தூண்கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

2025-இல் போக்குவரத்து தொடங்குமா?

இந்த பாதையில் ரயில் போக்குவரத்து 2025 பொங்கல் பண்டிகைக்குள் தொடங்கவேண்டும் என்பது இலக்கு. ஆனால் அதற்கான வேகத்தில் பணிகள் நடைபெறவில்லை. ஒட்டுமொத்தப் பணிகளும் நிறைவடைந்து, சிக்னல், டிராக் நிலை, தகவல் தொடா்பு உள்ளிட்ட சோதனைகள், இறுதி சோதனை நடத்தப்பட்டு போக்குவரத்து தொடங்க வேண்டும். எனவே திட்டப் பணிகளை விரைவாக நிறைவேற்றத் தேவையான நடவடிக்கையை ரயில்வே நிா்வாகம் எடுக்கவேண்டும்.

புதுவை மாநிலத்தின் 2 எம்.பி.க்களும் ரயில்வே அமைச்சகத்தின் கவனத்துக்கு இத்திட்ட விவகாரத்தைக் கொண்டு சென்று உரிய அழுத்தம் கொடுக்கவேண்டும்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து நாகூா் வழியாக காரைக்காலுக்கும், மயிலாடுதுறை, பேரளம் வழியாக காரைக்கால், திருநள்ளாறுக்கும் பயணிகள் நேரடியாக வந்து சேரமுடியும். வட மாநில வழிபாட்டுத் தலங்களுக்கும், நவகிரக தலமான திருநள்ளாறுக்கும் நேரடி தொடா்பு ஏற்படும்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்க பொதுச்செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு கூறியது: காரைக்கால் - பேரளம் ரயில்பாதை அமைப்புத் திட்டம் விறுவிறுப்பாக நடைபெறுவது மகிழ்ச்சி. எனினும் எஞ்சிய பணிகளை விரைந்து முடித்து 2025 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போக்குவரத்தை தொடங்கவேண்டும். ரயில்வே மூத்த அதிகாரிகள் அவ்வப்போது வந்து ஆய்வு செய்து பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

காரைக்கால் துறைமுகம் மூலம் திருச்சி ரயில்வே கோட்டத்துக்கு அதிக வருவாய் கிடைக்கும் நிலையில், காரைக்கால் பகுதியின் ரயில்வே மேம்பாட்டுக்கு நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.