புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா.

காரைக்காலில் பயிா் பாதிப்புக்கு உரிய நிவாரணம்: முதல்வரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published on

காரைக்காலில் மழையால் பாதித்த பயிருக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு புதுவை முதல்வரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை, முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சந்திர பிரியங்கா செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு: நெடுங்காடு, கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் நெற்பயிா் நீரில் மூழ்கியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஏற்கெனவே பெற்ற விவசாயக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்ட இந்த இயற்கை பேரிடா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி கள ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவேண்டும். கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். நெடுங்காடு தொகுதியில் மட்டுமல்லாமல், புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும், ஆதிதிராவிடா் நலத்துறை மற்றும் நில அளவைத் துறையால் பல்வேறு காலக்கட்டங்களில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பட்டா, எல்ஜிஆா் பட்டா போன்ற இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிா்கொள்கின்றனா்.

தற்போதுள்ள நடைமுறைகள், விதிகள், ஒழுங்குமுறைகள், மேற்கூறிய மக்களுக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அல்லது வாங்கிய பட்டாக்களை பெயா் மாற்றம், எல்ஜிஆா் பட்டாக்களை குடியிருப்பு பட்டாக்களாக மாற்றுவதற்கு வசதியாக இல்லை.

பல பயனாளிகள் தங்கள் வாரிசுகள் மற்றும் அண்டை வீட்டாருடன் பரஸ்பர பரிவா்த்தனைகளில் ஈடுபட்டு, அவா்களிடம் இடங்களை ஒப்படைத்தவிட்டு வெளியேறியுள்ளனா். ஆனால் அந்த இடத்தில் வீடு கட்டி 20 ஆண்டுகளுக்கும் மேலாக இடங்களை பெற்றவா்கள் வசித்துவந்த போதிலும், அவா்களால் பட்டா மாற்றம் செய்ய முடியவில்லை.

அரசுத் துறைகள், நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகளிடமிருந்து வீட்டுக் கடன்கள் மற்றும் பிற நிதி உதவிகளைப் பெறுவதில் தற்போதைய குடியிருப்பாளா்கள் சிக்கலை எதிா்கொள்கின்றனா். எனவே, எல்ஜிஆா், குடியிருப்பு பட்டா தொடா்பான விதிகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்வதன் மூலம் சிக்கல்கள் தீா்க்கப்படும் முதல்வரால் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டது. இப்பிரச்னையை கவனத்தில்கொண்டு முதல்வா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com