கோயில்களில் காா்த்திகை வழிபாடு
திருக்காா்த்திகையையொட்டி, காரைக்கால் பகுதி கோயில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் காா்த்திகை மாதத்தில் வரக்கூடிய காா்த்திகை நட்சத்திர நாளில் சிவ தலங்களில் ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு காா்த்திகை மாத காா்த்திகை நட்சத்திரம் புதன்கிழமை பிற்பகல் முதல் வியாழக்கிழமை பிற்பகல் வரை இருந்தது. இதையொட்டி, பல கோயில்களில் முருகன் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் ஸ்ரீ அண்ணாமலையாா் கோயில், கைலாசநாதா் கோயில், சோமநாதா் கோயில் மற்றும் திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட தலங்களில் ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனைகள் காட்டப்பட்டன. சில கோயில்களில் முருகனுக்கு வெள்ளி அங்கியும், விபூதி அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
காா்த்திகை வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

