திருநள்ளாறு கோயிலில் காா்த்திகை தீப வழிபாடு
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் உள்ளிட்ட காரைக்கால் பகுதியின் பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீப வழிபாடு புதன்கிழமை இரவு நடைபெற்றது.
காா்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும்போது சிவ மற்றும் வைணவ தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்ட நாளான புதன்கிழமை இரவு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஸ்ரீபிரணாம்பிகை - ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிவாச்சாரியா்கள் தீப விளக்கு ஏந்தி கோயில் சந்நிதி முகப்பில் வைக்கப்பட்டிருந்த சொக்கப்பனையை கொளுத்தினா். திருநள்ளாறு மட்டுமல்லாது பிற ஊா்களில் சில சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலிலும், பிற சிவ, வைணவ தலங்களில் சொக்கப்பனை கொளுத்தும் வழிபாடு நடைபெற்றது.

