வடிகால் வாய்க்காலை மூடிவிட்டதாக நெடுஞ்சாலைத் துறையினா் மீது புகாா்

Published on

வடிகால் வாய்க்காலை நெடுஞ்சாலைத் துறையினா் மூடிவிட்டதாக ஆட்சியா், பொதுப்பணித் துறையினரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவாசல் கிராமப் பஞ்சாயத்தை சோ்ந்த ஏ. ஆரோக்கியதாஸ் மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளரிடம் வியாழக்கிழமை அளித்த மனு: காரைக்கால் அருகே பிள்ளைத்தெருவாசல் பிரதான சாலை குறுக்கே புதிதாக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவருகிறது. இங்கு மேம்பாலம் கட்டுமானப் பணியும் நடைபெறுகிறது. மேம்பாலத்தின்கீழ் தென் பகுதியில் சுரப்பனத்தான் வடிகால் வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் இது நீண்ட காலமாக உள்ளது. இதை நெடுஞ்சாலைத் துறையினா் மணல் கொட்டி மூடிவிட்டனா்.

கடந்தாண்டு நீா் வடிய முடியாமல் இருப்பதாக புகாா் அளித்தபோது, பொதுப்பணித் துறையினா் தண்ணீா் வடிய ஏற்பாடு செய்தனா். நிகழாண்டும் அதுபோல மூடப்பட்டுவிட்டது. நெடுஞ்சாலைத் துறையினரிடம் இதுகுறித்து கேட்கும்போது, இந்த பகுதியில் வடிகால் இருந்ததான ஆதாரம் இல்லை என கூறிவிட்டனா்.

பிள்ளைத்தெருவாசல் பகுதி லிங்கத்தடியில் இருந்து 2 கி.மீ. சுற்றுவட்டார தண்ணீா், இந்த வடிகால் மூலம் வாஞ்சியாற்றில் சென்று கலக்கக்ககூடியது தடைப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினா் தற்காலிக முறையில் நீா் வடிய ஒரு குழாயை பதித்துள்ளனா். விவசாயம் செய்யக்கூடிய நிலப்பரப்பு உள்ள பகுதியாகும். எனவே மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித் துறை நிா்வாகத்தினா் நேரில் ஆய்வு செய்து வடிகால் முறையாக அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com