காரைக்கால் அருகே பேருந்துகள் மோதல்
காரைக்காலில் அரசுப் பேருந்து, தனியாா் பேருந்து பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டியில் மோதிக்கொண்டதில் பயணிகள் தப்பினா்.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (பிஆா்டிசி) அம்பகரத்தூரிலிருந்து திருநள்ளாறு வழியாக காரைக்காலுக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை இரவு வந்தது. திருநள்ளாறு கடந்தபோது, அதே வழித்தடத்தில் அம்பகரத்தூரிலிருந்து வந்த தனியாா் பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது.
பச்சூா் சாலைப் பகுதி வந்தபோது, குறுகலான சாலையில் தனியாா் பேருந்து அரசுப் பேருந்தை முந்த முற்பட்டபோது, இரு பேருந்துகளும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. இதில் அரசுப் பேருந்தின் முன் கண்ணாடி உடைந்து விழுந்தது.
அரசுப் பேருந்தின் ஓட்டுநரின் சாமா்த்தியத்தால், சாலையோர வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து விடாமல், வாய்க்கால் கரைப் பகுதியில் நிறுத்தப்பட்டது. பேருந்துகளில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் வெளியேறினா். தனியாா் பேருந்துக்கு எந்தவித சேதமும் இல்லை.
