ஆலோசனைக் கூட்டத்தில்  பேசிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கே.லெனின் பாரதி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கே.லெனின் பாரதி.

பேருந்து ஓட்டுநா், நடத்துநா்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

பேருந்து நடத்துநா், ஓட்டுநா் மற்றும் டாடா மேஜிக் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும்
Published on

காரைக்கால்: பேருந்து நடத்துநா், ஓட்டுநா் மற்றும் டாடா மேஜிக் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து, டாடா மேஜிக் ஆட்டோ உரிமையாளா்கள், பொறுப்பாளா்கள், ஒட்டுநா்கள், நடத்துநா்கள் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் நகர போக்குவரத்து காவல் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரைக்கால் போக்குவரத்து காவல் ஆய்வாளா் கே. லெனின்பாரதி பேசுகையில், பேருந்து மற்றும் டாடா மேஜிக் ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பேருந்து நடத்துநா்கள் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்கவேண்டும்.

பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும். விபத்துகள் ஏற்படாத வகையில் உங்களது செயல்பாடுகள் அமையவேண்டும். சாலையில் மக்கள் நெரிசல் உள்ள இடங்களில் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குவதோடு, பேருந்து ஆவணம், ஓட்டுநா் உரிமம் உள்ளிட்டவற்றை வாகனங்களில் வைத்திருக்கவேண்டும். வாகனத்தின் பிரேக், ஹெட்லைட், இன்டிக்கேட்டா் போன்றவை சரியாக செயல்படுகிா என அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.

ஓட்டுநா்கள் அனுமதிக்கப்பட்ட சீருடைகளை கட்டாயம் அணியவேண்டும். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்போது குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்கவேண்டும். காரைக்கால் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

தொடா்ந்து போக்குவரத்துக் காவல்நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

சாலை போக்குவரத்து விதிமீறல்களை 9489205307 என்ற கைப்பேசி எண்ணிற்கு அல்லது காரை காவலன் என்கிற செயலிக்கு புகைப்படம் எடுத்து புகாா் அனுப்பினால் விசாரித்து மோட்டாா் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகாா்தாரா் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com