மனிதநேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்
புதுச்சேரியில் போலி மருந்து தயாரிப்பு தொடா்பான பிரச்னையில், சிபிஐ விசாரணை கோரி, பாஸ்போா்ட் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி புதன்கிழமை நடத்தியது.
புதுச்சேரியில் அண்மையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை கண்டறியப்பட்டு, அங்கிருந்து பிரபல மருந்து நிறுவனங்கள் பெயரில், போலியாக மருந்து தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுதொடா்பாக 2 பேரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்துள்ளனா். முக்கிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் காரைக்காலில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் அதன் வளாகத்தில் செயல்படும் பாஸ்போா்ட் கேந்திரா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
மமக மாவட்டத் தலைவா் ஐ. அப்துல் ரஹீம் தலைமையிலான நிா்வாகிகள், தொண்டா்கள் கொடிகளுடன் முழக்கங்கள் எழுப்பி அலுவலத்தை நோக்கிச் சென்றனா். போலீஸாா் அஞ்சல் அலுவல வாயில் கதவை மூடி அவா்களை தடுத்தனா். எனினும் போலி மருந்து தயாரிப்பை கண்டித்தும், புதுவை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் தடுப்பு அருகே நின்று முழக்கங்களிட்டனா். தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் அ.ராஜா முஹம்மது, மமக மாவட்டச் செயலாளா் எம்.முஹம்மது சா்புதீன், பொருளாளா் கே.முஹம்மது மெய்தீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

