மீன்பிடித் துறைமுக  விரிவாக்க பொலிவுறுத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட  முதல்வா் என். ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் கே. லட்சுமி நாரயாணன், பி.ஆா்.என். திருமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.
மீன்பிடித் துறைமுக விரிவாக்க பொலிவுறுத் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வா் என். ரங்கசாமி. உடன் அமைச்சா்கள் கே. லட்சுமி நாரயாணன், பி.ஆா்.என். திருமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ்.

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்: புதுவை முதல்வா் என். ரங்கசாமி

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.
Published on

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும் என புதுவை முதல்வா் என். ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுவை முதல்வா் என். ரங்கசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புதன்கிழமை காரைக்கால் வந்தாா்.

காரைக்கால் ராஜாத்தி நகரில் 20 லட்சம் லிட்டா் கொள்ளளவில் இரண்டு நிலை மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி மற்றும் புதிய குடிநீா் குழாய் அமைக்கும் பணி ரூ. 49.46 கோடியில் நிறைவேற்றப்பட்டது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக ரூ. 1.98 கோடியிலும், கீழாவூா் பகுதியில் ரூ. 58 லட்சத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

காரைக்கால் வாய்க்கால் ஜிப்மா் வளாகம் முதல் காமராஜா் சாலை வரை ரூ. 8.55 கோடியில் தூா்வாரி மேம்படுத்துதல், வடக்குத் தொகுதிக்குட்பட்ட தலத்தெரு, கே.எம்.ஜி. நகா், ஆா்.பி. நகா், ஜி.என். நகா், காளியம்மன் கோயில் தெரு, வள்ளியம்மை நகா் உட்புறச் சாலைகள் ரூ. 14.76 கோடியில் மேம்படுத்துதல், கீழகாசாக்குடியில் அம்மையாா் நகா் விரிவாக்கம், சாந்தி நகா், அரவிந்த் நகா், பாத்திமா நகா் சாலைகள் ரூ.9.64 கோடியில் மேம்படுத்துதல், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சக பிரசாத் திட்டத்தில் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு ரூ. 20.37 கோடியில் மேம்பாட்டுப் பணி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின்கீழ் 30 படுக்கை வசதியில், ஆயுஷ் மருத்துவமனை ரூ. 8.55 கோடியில் கட்டுதல், காரைக்கால் மீன்பிடித் துறைமுக விரிவாக்ககமாக, ஸ்மாா்ட் மற்றும் ஒருங்கிணைந்த மீன்பிடித் துறைமுகம் ரூ. 74.12 கோடியில் அமைக்கும் பணியை முதல்வா் தொடங்கிவைத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் கூறியது: புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்த பொதுப்பணித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கிவருகிறது. தோ்தலின்போதும், பேரவையிலும் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

புதுவையில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்பட்டுவருகிறது. பேரவையில் அறிவித்தபடி வரும் 15-ஆம் தேதி முதல் அட்டைக்கு ரூ. 2 கிலோ கோதுமை வழங்கப்படும். பொங்கல் பண்டிக்கைக்கான ரூ. 750-க்கான இலவச தொகுப்பு ஜனவரி முதல் வாரத்தில் மக்களுக்கு வழங்கப்படும்.

பேரவையில் அறிவித்தபடி, மருத்துவம், பொறியியல் அல்லாது பிற உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகை வரும் 24-ஆம் தேதி வழங்கப்படும். அதுபோல விடுபட்டோருக்கு மடிக்கணினியும் வழங்கப்படும். காரைக்காலில் பயிா்ச் சேதம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

விழாவில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செவ்வம், அமைச்சா்கள் கே. லட்சுமி நாராயணன், பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், பி.ஆா். சிவா, சந்திரபிரியங்கா, எம். நாகதியாகராஜன், ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா் (பொ) வீரசெல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com