மழை பாதிப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மழையால் பாதித்த மக்கள், விவசாயிகளுக்கு புதுவை அரசு உடனடியாக நிவாரணம் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், அண்மையில் தவெகவில் இணைந்தவருமான கே.ஏ.யு. அசனா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை :
புதுவை மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான தொகுப்பு வழங்கப்படும் என முதல்வா் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பொங்கல் தொகுப்பு வழங்கிவிட்டு, மழை நிவாரணத்தை நிறுத்திவிடக்கூடாது. காரைக்காலில் வடகிழக்குப் பருவமழையால் பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பயிா் பாதித்தோருக்கு இதுவரை நிவாரணமோ, பொதுமக்களுக்கான நிவாரணமோ அறிவிக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. காரைக்காலில் இன்னும்கூட மழை பெய்துகொண்டிருக்கிறது. இதனால் தொழிலாளா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
பயிா் பாதிப்பை கருத்தில்கொண்டு, உரிய மதிப்பீடு செய்து விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 30 ஆயிரம் தரவேண்டும்.
பொதுமக்களின் நிலையை கருத்தில்கொண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரா்களுக்கும் 50 கிலோ அரிசி, ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும் இதற்கான அறிவிப்பை முதல்வா் விரைவில் வெளியிடவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
