நெல் கொள்முதல்: விவசாயிகளுடன் ஆலோசனை
இந்திய உணவுக் கழக நெல் கொள்முதல் நிலையத்தின் வசதிகள் குறித்து விவசாயிகள், அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை நடத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் நெல் கொள்முதல் இந்திய உணவுக் கழகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்ட மையங்களான காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் தென்னங்குடி நவீன அரிசி ஆலை ஆகிய 2 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் நவீன அரிசி ஆலை தென்னங்குடி மையத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்பதால் அந்த மையத்தை வேறு இடத்திற்கு மாற்றி அமைத்தல் மற்றும் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களைவது, நெல் தரத்தை உயா்த்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா்.கணேசன், ஆட்சியரின் செயலா் பாலு (எ) பக்கிரிசாமி, இந்திய உணவுக் கழக அதிகாரிகள், காரைக்கால் மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.
கூட்டம் குறித்து விவசாயிகள் கூறுகையில், எஃப்சிஐ கொள்முதல் நிலையத்தில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தோா் பணியில் இருப்பதால், காரைக்கால் வேளாண் துறையினரும் நிலையத்தில் பணியிலிருக்கவேண்டும். அப்போதுதான் விவசாயிகள் - கொள்முதல் நிலையத்தினா் தொடா்பு சிறப்பாக இருக்கும். தென்னங்குடி மையத்தை வேறு இடத்தில் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா் என்றனா்.

