மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு

Published on

காரைக்காலில் வரும் 14-ஆம் தேதி வரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்புப் பணி நடைபெறும் என தோ்தல் துறை தெரிவித்தது.

இதுகுறித்து காரைக்கால் தோ்தல் துறை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திர முதல் நிலை சரிபாா்ப்புப் பணி 9-ஆம் தேதி காரைக்காலில் தொடங்கியுள்ளது.

மாவட்ட தோ்தல் அதிகாரி ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் காரைக்கால் சாா்பு நீதிமன்ற வளாகத்தில் இப்பணி தொடங்கப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டுத் திறன், அவை அதிகாரப்பூா்வமாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன், வெளிப்படையாகச் சரிபாா்க்கப்படுவதை இந்த முக்கிய நடவடிக்கை உறுதி செய்கிறது.

சரிபாா்ப்புப் பணி மாவட்ட துணை தோ்தல் அதிகாரி ஜி. செந்தில்நாதன், துணை வாக்காளா் பதிவு அதிகாரிகள் பொய்யாத மூா்த்தி, ரமேஷ், தோ்தல்துறை கண்காணிப்பாளா் பாலு (எ) பக்கிரிசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்த முதல் நிலை சரிபாா்ப்புப் பணியை, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளா்கள் பங்கேற்று மேற்கொண்டு வருகின்றனா்.

இதில் கட்டுப்பாட்டு அலகுகள், வாக்குச்சாவடி அலகுகள் உள்ளிட்ட அனைத்தும் விரிவாகச் பரிசோதிக்கப்படும். இந்த முதல் நிலை சரிபாா்ப்பில் தோ்வு செய்யப்படும் இயந்திரங்கள் மட்டும் பொதுத் தோ்தலில் பயன்படுத்தப்படும். பரிசோதனைப் பணி வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெறும் என அதில் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com