மே 29-இல் சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்கால் சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு மே 29-இல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் - கைலாசநாத சுவாமி தேவஸ்தான வகையறாவுக்குட்பட்ட சித்தி விநாயகா் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய தீா்மானித்து, பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
காரைக்காலில் 2026-ஆம் ஆண்டு மாங்கனித் திருவிழா நடைபெறுவதற்கு முன்பாகவே இக்கோயில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனா்.
இந்நிலையில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், இக்கோயில் திருப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். திருப்பணிக் குழுத் தலைவா் ஆா். வெற்றிச்செல்வன் மற்றும் குழுவினா் பணிகளின் நிலை குறித்து தெரிவித்தனா்.
மேலும் கோயில் கிழக்குப் பகுதியில் ரூ. 8 லட்சத்தில் மண்டப கட்டுமானம் தொடங்கப்படவுள்ளதாகவும், பிற பணிகளை விரைவாக முடிக்க திட்டமிட்டு நடைபெறுவதாக தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான தேதியை சிவாச்சாரியா்கள் முடிவு செய்தனா். அதன்படி 29.5.2026 காலை 7 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்கிற அறிவிப்பு பேரவை உறுப்பினா் மற்றும் தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

