மீனவ கிராமத்தில் கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி தொடக்கம்
காரைக்கால்: மீனவ கிராமத்திலும், கோயில்பத்து பகுதியிலும் ரூ. 2 கோடியில் மேம்பாட்டு திட்டப் பணிகளை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காரைக்கால் கோயில்பத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு வளாகத்தில் பிளாக் -ஏ1 மற்றும் ஏ2 ஆகிய பகுதிகளை ரூ.59.84 லட்சத்தில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும் வடக்கு தொகுதிக்குட்பட்ட கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள 1-ஆவது குறுக்குத் தெரு முதல் 8-ஆவது குறுக்குத் தெரு வரை கழிவு நீா் வடிகால் அமைக்கும் பணிக்கு ரூ. 1.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளை தொடங்கிவைக்கும் பூமி பூஜை நிகழ்ச்சி அந்தந்த பகுதியில் நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில், குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், கிராமப் பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

