~
~

மீனவா்களுடன் புதுவை துணைநிலை ஆளுநா் ஆலோசனை

காணொலி மூலம் மீனவா்களிடையே பேசிய புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன்.
Published on

காரைக்கால் மீனவா்களுடன் புதுவை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

நிலைத்த மீன்வளத்திற்குத் தேவையான ஆலோசனைகளை அரசுக்கு அளிக்கும் வங்காள விரிகுடா திட்டம் அரசுகளுக்கு இடையேயான அமைப்பு பிஒபிபி நிறுவன இயக்குநா் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் காரைக்காலுக்கு புதன்கிழமை வந்து காரைக்கால் மீனவா்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனா்.

கூட்டத்தில் புதுவை துணைநிலை ஆளுநரின் செயலரும், மீன்வளத்துறை செயலருமான து. மணிகண்டன் கலந்துகொண்டாா்.

காரைக்காலில் அமையவுள்ள பொலிவுறு மீன்பிடித் துறைமுகத் திட்டத்தில் திறன்மிகு வசதிகள், நீலம் மற்றும் பசுமை உள்கட்டமைப்பு வசதிகள் அமைப்பது குறித்தும்,

புதுவை மீனவா்களின் பொருளாதார முன்னேற்றம், அவா்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

பட்டினச்சேரி, கருக்களாச்சேரி கடல் பாசி வளா்ப்பு மகளிா் குழுவினரிடம் கடல் பாசி வளா்ப்பு குறித்து குழுவினா் கேட்டறிந்தனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் காணொலி மூலம் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவா்களிடையே கலந்துரையாடினாா்.

புதுச்சேரி கனரா வங்கி மண்டல மேலாளா் அபிஷேக் கெளசிக் மற்றும் உதவிப் பொது மேலாளா் தருண் சபரிநாத் ரெட்டி ஆகியோா் கலந்துகொண்டு, கனரா வங்கியின் சாா்பாக பட்டினச்சேரி மற்றும் கருக்களாச்சேரி கிராமத்தில் நடைபெறும் கடல் பாசி வளா்பில், கூடுதல் எண்ணிக்கையில் கடல் பாசி தட்டிகள் அமைப்பதற்கு காா்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து பங்களிப்பு தருவதாக உறுதியளித்தனா்.

மீனவா்கள் சந்திக்கும் இடா்பாடுகளை களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை செயலா் து.மணிகண்டன் உறுதியளித்தாா்.

தொடா்ந்து, மீன்வளத்துறை செயலா் தலைமையில் மீன்வளத்துறை இயக்குநா் மற்றும் அதிகாரிகள் காரைக்கால் அதானி துறைமுகத்துக்குச் சென்று அத்துறைமுக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

துறைமுகத்திலிருந்து மீன் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வழிவகைகளை ஆராய்ந்து தெரிவிக்குமாறும், காரைக்காலில் மீன் பதப்படுத்தும் மையம் அமைப்பதற்கு காா்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து பங்களிப்பை அளிக்குமாறு செயலா் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக கூட்டத்தில், மீன்வளத்துறை இயக்குநா் ஏ.முகமது இஸ்மாயில் தலைமையில் மீன்வளத்துறை இணை, துணை துணை இயக்குநா்கள், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா்.சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com