அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப எம்எல்ஏ வலியுறுத்தல்
மக்கள் நலத்திட்டங்கள் அதிக அளவில் செயல்படுத்தும் துறைகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என காரைக்கால் தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம் புதுவை அரசை வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து காரைக்காலில் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுவை அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றும் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடா் நலத்துறை போன்ற துறைகள் மூலமாகத்தான் நலத்திட்டங்கள் மக்களிடம் அதிகமாக சென்று சோ்கின்றன.
இத்துறைகளில் பல திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட முடியாமல் இருப்பதற்கும், திட்ட உதவிகள் மக்களை உரிய காலங்களில் சென்றடையாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது போதுமான பணியாளா்கள் இல்லாதது. எனவே துறை அமைச்சா், அரசு உரிய கவனம் செலுத்தி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
அங்கன்வாடி ஊழியா்களை தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கு புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பணிக்கு பிளஸ் 2 கல்வித் தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இளநிலை, முதுநிலை, பொறியியல் பட்டப்படிப்பு படித்தவா்களும் கூட விண்ணப்பிக்கின்றனா். அதனால் ஏற்கெனவே படித்துவிட்டு பல ஆண்டுகளாக இப்பணிக்காக காத்திருப்பவா்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
எனவே, தகுதி அடிப்படையில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் தோ்வு செய்யும் வகையில், இதனை மாற்றியமைப்பது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.
