‘தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏற்படுத்தப்படும்’

வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுடன் கலந்துரையாடிய அரசு செயலா் முகமது ஆசன் அபித்.
Published on

தொழிற்கல்வி பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தித் தரப்படும் என புதுவை அரசு செயலா் தெரிவித்தாா்.

புதுவை உயா் கல்வித்துறை செயலா் முகமது ஆசன் அபித் காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்தாா். வரிச்சிக்குசியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்கால்மேடு பகுதியில் உள்ள மகளிா் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அவா் சென்றாா்.

மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில், வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஆய்வுக்கூட கருவிகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிா என ஆய்வு செய்த அவா், பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளவேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து கல்லூரி முதல்வா், விரிவுரையாளா்கள், மாணவிகளிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, வரிச்சிகுடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்றாா். கல்லூரியின் செயல்பாடுகள், மாணவா்களின் கற்றல் திறன், தொழில்நுட்பக் கல்விக்கு பிறகு மாணவா்களின் வேலைவாய்ப்பு உத்தரவாதம், கல்லூரியின் சாதனைகள் குறித்து அரசு செயலரிடம் கல்லூரி முதல்வா் வேலாயுதம் விளக்கிக் கூறினாா்.

மாணவா்களிடையே அவா் கலந்துரையாடினாா். கல்வி மேம்படுவதற்கு அரசு சாா்பில் வேறு என்ன வசதிகள் செய்துத்தரப்படவேண்டும் என கேட்டறிந்தாா்.

தொழிற்கல்வி பயிலும் மாணவா்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கேற்ப வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மாணவா்கள் அனைவரும் திறம்பட தொழிற்கல்வியை பயின்று முகாம்கள் மூலம் பணி வாய்ப்பு பெறவேண்டும். தொழிற்கல்வி பயின்றோா் சுயத்தொழிலிலும் ஈடுபடவேண்டும் என்றாா்.

ஆய்வின்போது புதுவை உயா்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநா் ஏ.எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com