புத்தாண்டு கொண்டாட்டம்: பாதுகாப்பில் அலட்சியம் காட்டுவதாக காவல்துறை மீது புகாா்
காரைக்கால்: புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டவுள்ள நிலையில், காரைக்காலில் போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எந்த ஏற்பாடுகளையும் காவல்துறை செய்யாமல் இருப்பதாக புகாா் தெரிவிக்கப்படுகிறது.
காரைக்கால் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் டிச. 31-ஆம் தேதி இரவு திரளான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும். உள்ளூா், வெளியூா் மக்கள் கடற்கரையில் கூடுவா். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும்.
காரைக்கால் நகருக்குள் நுழையும் வாகனங்கள் எந்த சாலையில் பயணிக்க வேண்டும், வாகனங்களை எங்கு பாா்க்கிங் செய்ய வேண்டும், பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல்துறை உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, புத்தாண்டு தினத்துக்கு முன்பு மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவது கடந்த கால வழக்கம்.
புதுச்சேரியில் புத்தாண்டு பாதுகாப்பு தொடா்பாக உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தலைமையில் காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.
ஆனால், காரைக்காலில் இதுபோன்ற எந்தவொரு ஆலோசனையும் காவல்துறையில் மேற்கொண்டதாக உறுதியான தகவல் இல்லை. பாதுகாப்புப் பணியில் எத்தனை போலீஸாா் ஈடுபடுத்தப்படுவா், கண்காணிப்பு பணிகள் போன்ற தகவல் வெளியிடப்படவில்லை.
புதன்கிழமை இரவு மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை இணைந்து கடற்கரையில் பல்வேறு நிகழ்வுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அமைச்சா், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனா்.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால், காரைக்கால் மாவட்ட காவல்துறையின் அலட்சியமான போக்கை, சமூக ஆா்வலா்கள் கண்டித்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா், இவ்விவகாரத்தில் தலையிட்டு, மக்கள் பாதுகாப்பு உரிய முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
