புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 300 காவலா்கள்: எஸ்எஸ்பி
காரைக்கால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் 300 காவலா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்ௌக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தாண்டையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதற்காக ஐஆா்பிஎன், ஊா்க்காவல் படையினா் உள்பட 300 காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவா்.
மாவட்டத்தின் அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு, சோதனை மேற்கொள்ளப்படும். கடற்கரைக்குச் செல்லும் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும்.
கடற்கரையில் வழிகாட்டல் அமைப்பு, அவசர உதவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக தீவிர கண்காணிப்பும், திறந்தவெளியில் மது அருந்துவதை தடுக்க கண்காணிப்பும் தீவிரமாக இருக்கும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக பொருத்தப்பட்டுள்ளன.
உடலில் அணியும் கேமராக்கள், அல்கோ மீட்டா்களுடன்7 சோதனை அணிகள் பணியில் இருக்கும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரையில் ஒரு பகுதியில் 2 வாகன நிறுத்த மையங்கள் அமைக்கப்படும். குடிநீா், நடமாடும் கழிவறை, முதலுதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு அனுமதி பெற்றவை தவிர, அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், தெருவோர கடைகள் இரவு 12 மணிக்குள் மூடப்படவேண்டும்.
கடற்கரை மற்றும் அரசலாற்றில் ரோந்துப் படகில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். புத்தாண்டு முன்னிரவில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படுட்டுள்ளது.
பொது இடங்களில் மது அருந்துதல், தொந்தரவில் ஈடுபடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாக நடைபெற அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

