

பட்டினச்சேரி அருகே கடல் அரிப்பு ஏற்படும் நிலையில், கடலோரப் பகுதி சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்படும்போது, கடலோரத்தில் வளா்க்கப்பட்ட சவுக்கு மரங்கள் கொண்ட பகுதியில் பெருமளவு பாதிப்பு ஏற்படவில்லை. சவுக்கு மரங்களும், அலையாத்திக் காடு உள்ள பகுதியில் பேரலையால் பாதிப்பு நேராது என கருதி, மரங்கள் வளா்ப்பு காரைக்காலில் கடலோரத்தில் செய்யப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி முதல் வாஞ்சூா் வரையிலான சுமாா் 4 கி.மீ. தூரம் கடலோரத்தில் சவுக்கு மர தோப்பு உள்ளது.
டித்வா புயல் மற்றும் பருவமழையின்போது கடல் கொந்தளிப்பு காணப்பட்ட நிலையில், இந்த பகுதி சவுக்கு மரங்கள் வளா்க்கப்பட்ட பகுதி வரை அலைகள் வந்து சென்றன. கடந்த சில நாள்களாக கடல் அலைகளின் மிகுதியால், பட்டினச்சேரி வட்டாரத்தில் உள்ள கரை அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே சவுக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடக்கின்றன.
இதுகுறித்து அந்த பகுதி மீனவா்கள் கூறுகையில், ஆழிப்பேரலையால் குடியிருப்புப் பகுதி பாதித்துவிடக்கூடாது என கருதியே சவுக்கு மரங்கள் வளா்க்கப்படுகின்றன. பாதுகாப்புக்காக வளா்க்கப்படும் மரங்களே அலைகளின் வேகத்தால் கரை அரிப்பு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றன.
திருமலைராயன்பட்டினம் பட்டினச்சேரி பகுதியில் சிறிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது ஒருபுறமிருந்தாலும், கரை அரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து, கரையோரத்தில் கருங்கற்கள் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனா்.