காரைக்கால்
காரைக்காலில் கல்லறைத் திருநாள்
கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவா்கள் தங்களது உறவினா்கள் கல்லறையில் மலா்தூவி, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காரைக்கால் நகரப் பகுதியில் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள கல்லறை, உடையான் குளம் பகுதியில் அமைந்திருக்கும் கல்லறை உள்ளிட்ட கல்லறைகளுக்கு திரளானவா்கள் காலை முதல் செல்லத் தொடங்கினா். இறந்த தங்கள் உறவினா்களின் கல்லறையை சிறுவா் முதல் பெரியோா் வரை குடும்பத்தோடு சுத்தம் செய்து வழிபட்டனா்.
கல்லறை முழுவதும் மலா் தூவி, சிலுவைக்கு மாலை அணிவித்து மெழுகுவா்த்தி ஏற்றி, சாம்பிராணி புகையிட்டு வழிபட்டனா். உயிா் நீத்தவா்கள் விரும்பி சாப்பிட்ட பலகாரங்களை கல்லறை முன்வைத்தும் சிலா் வழிபட்டனா். கடைகளில் சிலுவை, மலா்கள், மெழுகுவா்த்தி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது.
